முக்கிய செய்திகள்

Saturday, October 25, 2008

ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜுன்: புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் கொதிப்பு

இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.

இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள்.

உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜுனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து புலம்பெயர் தமிழ் மக்களிடையே பல விதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருவதனைக் கருத்திற்கொண்டு இந்தியாவில் 22 ஓக்டோபர் 2008 அன்று வெளிவந்த செய்தி இதழில் இருந்து ஒரு சிறிய பகுதியை இந்த செய்தியுடன் இணைத்துள்ளோம்.

News By-Tamilwin.com

0 comments:

  © Blogger template Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP